மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு... டேவிட் வார்னருக்கு சிறை தண்டனை!
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்குப் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது, சிட்னியின் கிழக்குப் பகுதியில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த டேவிட் வார்னரை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் நிறுத்திச் பரிசோதனை செய்தனர். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில், அவரது இரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக மதுவின் அளவு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சிட்னியில் உள்ள வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு வார்னர் நேரில் ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் பாபி ஹில் ஆஜராகி வார்னர் குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ள நிலையில், இவ்வழக்கில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆஸ்திரேலிய சட்டப்படி, அவருக்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம். மேலும் 2,200 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் ரூ.1.2 லட்சம்) வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கேப்டன் பதவிக்கு ஆபத்து: பிக் பேஷ் லீக் தொடரில் 'சிட்னி தண்டர்' அணியின் கேப்டனாகப் பணியாற்றி வரும் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரது கேப்டன் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.