செஞ்சி சிறுமி மாயமான வழக்கு... காவல் நிலையத்தில் யாகம் நடத்திய ஆய்வாளர்... 40 நாட்களாக துப்பு துலங்காததால் சிறப்புப் பூஜை!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான சிறுமியைக் கடந்த 40 நாட்களாகத் தேடியும் எந்தத் துப்பும் துலங்காத நிலையில், சிறுமியை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சிறப்புப் பூஜை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி வட்டம் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் கடந்த 40 நாட்களாகச் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

சிறுமியை மீட்கவும் குற்றங்களைக் குறைக்கவும் பிரார்த்தனை: வழக்கில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டுள்ளது. மாயமான சிறுமியை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டும் என்றும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் குறைய வேண்டும் என்றும் வேண்டி இந்தச் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவல்துறையினர் அறிவியல் பூர்வமான விசாரணை முறைகளைக் கையாண்டு வரும் நிலையில், வழக்கில் துப்பு துலங்குவதற்காகக் காவல் நிலையத்திலேயே ஆய்வாளர் சிறப்புப் பூஜை நடத்தியிருப்பது அப்பகுதி மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, மாயமான சிறுமியை மீட்பதற்கான தேடுதல் பணிகளைப் போலீசார் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.