கொளத்தூர் எம்.எல்.ஏ பாபு ஆதரவாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

 

சென்னை பெரம்பூரில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரைத் தொலைபேசியில் பேசி, வரவழைத்துத் தாக்கியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் ஆதரவாளர் மீது திரு.வி.க நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரியாஸ் என்பவர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ரியாஸ், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரான ஜமால் முகமது குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜமால் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள், வழக்கறிஞர் ரியாஸைத் தொலைபேசி வாயிலாகப் பேசி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த வழக்கறிஞர் ரியாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில், அளித்த புகாரின் அடிப்படையில் திரு.வி.க நகர் காவல் துறையினர் ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.