முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு!

 

தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், ஒருமையிலும் விமர்சித்துப் பேசியதாகத் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே திமுக மற்றும் தவெக வினரிடையே அரசியல் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள ஆத்தூரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். தவெக அரசு இன்னும் 6 மாதங்களுக்கு மேல் தாங்காது என்றும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் சரியாகச் செயல்படவில்லை என்றும் அவர் ஒருமையிலும் அவதூறான வகையிலும் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த எல்லை மீறிய பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலமைச்சரை இழிவுபடுத்தும் நோக்கில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தவெக நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர்.

தவெகவினரின் புகாரைப் பரிசீலித்த ஆத்தூர் காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு பரப்புதல், பொது இடத்தில் கலவரம் தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய 3  பிரிவுகளின் கீழ் தற்பொழுது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே சொத்துக் குவிப்பு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குகளில் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணை செய்ய அமலாக்கத்துறை தவெக அரசிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்த நிலையில், முதலமைச்சரை அவதூறாகப் பேசிய வழக்கும் அவர் மீது பாய்ந்துள்ளது திமுக தரப்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.