நாடு முழுவதும் ஏடிஎம்களில் திடீர் பண தட்டுப்பாடு... பொதுமக்கள் அவதிப்படும் அபாயம்!
நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் வரும் நாட்களில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்களை நிர்வகித்து, அவற்றில் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான 'ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு', இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், வங்கிகளில் இருந்து ஏடிஎம் மையங்களுக்குக் கிடைக்கும் ரொக்கப் பணம் பெருமளவு குறைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களின் தடையற்ற செயல்பாட்டிற்குச் சுமார் 94,000 கோடி ரூபாய் ரொக்கப் பணம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி வெறும் 54,000 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைப்படும் தொகையில் வெறும் 57 விழுக்காடு மட்டுமே தற்போது ஏடிஎம்களை நிரப்பக் கிடைக்கிறது.
கூகுள் பே, போன்பே போன்ற டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்போரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஏடிஎம்களைப் பராமரிப்பதற்கான செலவு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் ஏடிஎம் இயக்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வங்கிக் கிளைகள் மற்றும் பணப் பெட்டகங்களில் இருந்து ஏடிஎம்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பணத்தின் அளவை வங்கிகள் தொடர்ந்து குறைத்து வருகின்றன. பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக மாறிவிட்டாலும், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதி மக்கள் இன்னமும் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஏடிஎம் மையங்களையே முழுமையாக நம்பியுள்ளனர்.
குறிப்பாக, அரசின் நிதியுதவிகளைப் பெறும் ஏழை எளிய மக்கள், முதியோர்கள் மற்றும் சிறு வணிகர்கள் இந்த திடீர் பணத் தட்டுப்பாட்டால் தற்காலிகமாகப் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியை உடனடியாகத் தீர்க்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.