சொகுசு காரின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாகப் பணம்... கோடிக்கணக்கில் பறிமுதல்!
கேரளா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் தேர்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முத்தங்கா சோதனைச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட பெரும் தொகை சிக்கியுள்ளது.
வயநாடு சுல்தான் பத்தேரியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முத்தங்கா சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் கேரள காவல்துறையினர் மற்றும் கலால்துறையினர் இணைந்து வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கேரளா நோக்கி வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.
காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள், காரைத் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது காரின் உட்புறத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரகசிய அறைகளில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் தாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்துடன் காரில் வந்த சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் (44) மற்றும் இஸ்மாயில் (40) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இது ஹவாலா பணமா அல்லது தேர்தல் தொடர்பான பணமா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால், மொத்தத் தொகையையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மற்ற சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.