கட்டுகட்டாகப் பணம், சொத்து பத்திரங்கள்... ரூ.64 கோடிக்கு சொத்துக்களைக் குவித்த போலீஸ் ஓட்டுநர்!

 

மத்திய பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பினர் நடத்திய அதிரடிச் சோதனையில், காவல் பயிற்சிக் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர் ரூ.64 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சட்டவிரோதமாகச் சேர்த்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காவல் பயிற்சிக் கல்லூரியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் பைரோஸ்கான் (48). இவர் அங்கு ஓட்டுநராகச் செயல்பட்டு வந்துள்ளார். பைரோஸ்கான் நீண்ட நாட்களாகப் பணிக்கு வராமல், தனது அதிகாரப் பின்னணியைப் பயன்படுத்திச் சர்ச்சைக்குரிய நிலங்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில், மத்திய பிரதேச ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பான லோக் ஆயுக்தா சிறப்புக்காவல் துறையினர், பைரோஸ்கான், அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்களின் வீடுகளில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய தொடர் புலனாய்வு மற்றும் சோதனைகளில், பைரோஸ்கான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெயரில் இருந்த பெருமளவிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் இதுவரை பைரோஸ்கான் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் 46 அசையா சொத்துகள் வாங்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.

இவர் வாங்கியுள்ள சொத்துகளின் கொள்முதல் மதிப்பு ரூ.18.79 கோடியாகும். ஆனால், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.64,01,11,768 (ரூ.64 கோடிக்கும் அதிகம்) என அதிகாரிகள் கணித்துள்ளனர். தொடர் விசாரணையில் இந்தூரில் உள்ள ஒன்பது புதிய விவசாய நிலங்கள் குறித்த விவரங்கள் வெளியாயின. இந்த நிலங்கள் அனைத்தும் 'ஸ்பார்க்வேவ் ரியல்டி இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டிருந்தன.

இந்நிறுவனமானது பைரோஸ்கானின் மனைவி ஹினா கான் மற்றும் இந்தூரைச் சேர்ந்த யுவராஜ் பன்வார் என்பவரால் கூட்டாக நடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஒரு சாதாரண காவல் துறை ஓட்டுநர் ரூ.64 கோடிக்கும் அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநில காவல் துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.