திண்டுக்கல், கோவையில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இன்று கோவை மற்றும் திண்டுக்கல்லில் பெரும் தொகையைப் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கோவையில் உள்ள முக்கியத் தொகுதிகளான கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.34.86 லட்சம் பணம் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முக்கியச் சந்திப்புகள் மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செட்டிநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை மறித்துச் சோதனை செய்தபோது, போதிய ஆதாரங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி தனிநபர் ஒருவர் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் அல்லது புதிய பொருட்களை மொத்தமாக எடுத்துச் சென்றால் அதற்கும் உரிய ரசீதுகள் அவசியம். ஆவணங்கள் இன்றிப் பறிமுதல் செய்யப்படும் பணத்தைத் திரும்பப் பெற, மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் குழுவிடம் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.42 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.