சக மாணவர்கள் சாதி வெறித் தாக்குதல்.. "இதுதான் சமூக நீதியா?" - எடப்பாடி ஆவேசம்!
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் ஜீவானந்தம் என்ற மாணவன் மீது, சக மாணவர்கள் சாதி வெறியுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 19-ம் தேதி இந்தத் தாக்குதல் நடந்த போதிலும், நான்கு நாட்கள் கடந்தும் காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யாமலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சமூக நீதி பற்றிப் பேசும் மு.க.ஸ்டாலின் அவர்களே, இந்தச் சம்பவம் எந்த 'மாடலில்' வருகிறது? மாணவர்கள் மத்தியில் சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரசார மேடைகளில் இல்லாத பெருமைகளை அளந்துவிடும் 'பொம்மை முதல்வர்', ரியலாக நடக்கும் இந்தச் சமூக அநீதி பற்றி ஒரு வார்த்தையாவது பேசுவாரா? என்று அவர் காட்டமாக வினவியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவன் ஜீவானந்தம் விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாங்குநேரி சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தற்போது மீண்டும் ஒரு மாணவன் சாதிய வன்மத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இதனை ஒரு பெரிய அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.