சீனாவில் கத்தோலிக்கர்களுக்கு கடும் நெருக்கடி - அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயங்களில் இணைய கட்டாயம்!
சீனாவில் வாழும் சுமார் 1.20 கோடி கத்தோலிக்கர்களின் மதச் சுதந்திரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பகம்' அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்களுக்கு உட்பட்டு மத நடைமுறைகளை மாற்றியமைக்க சீனா எடுத்து வரும் முயற்சிகள் உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
வாட்டிகன் மற்றும் போப் ஆண்டவருக்கு விசுவாசமாகச் செயல்படும் 'சுயாதீன தேவாலயங்கள்' சீன அரசால் வலுக்கட்டாயமாகக் கலைக்கப்படுகின்றன.
மக்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் 'அரசு தேவாலயங்களில்' இணையுமாறு அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
மதத் தலைவர்கள் மற்றும் மக்கள் தங்கள் ஆன்மிகத் தலைமையைக் காட்டிலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார்கள்.
சீனாவின் இந்தச் செயல்பாடு கத்தோலிக்க மக்களிடையே பெரும் அச்சத்தையும், சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. "மத சுதந்திரத்தை மதிக்க வேண்டும்" என வாட்டிகன் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழலில், சீனாவின் இந்தக் கடும் கட்டுப்பாடுகள் இருதரப்பு உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.