காவிரியாற்றுக்குச் சீர்வரிசை... ஆடிப்பெருக்கில் அம்மா மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

 

ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் உற்சவர் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருளிக் காவிரித் தாய்க்குச் சீர்வரிசை அளிக்கும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் ரத்தின அங்கி சேவையில், தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபத்தை வந்தடைந்தார். அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளைத் தரிசிக்கத் திரளான பக்தர்கள் படித்துறையில் திரண்டனர்.

அரங்கநாத சுவாமி காவிரியைத் தனது தங்கையாகப் பாவித்து, ஆடிப்பெருக்கு நாளில் சீர்வரிசை வழங்கிப் போற்றுவது தொன்றுதொட்டு வரும் ஐதீகம். நம்பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரங்கள், மாலைகள், வளையல்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் காவிரி அன்னைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, இரவு அம்மா மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், வழியில் வெளியாண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டு மூலஸ்தானம் சென்று அடைவார். இந்த ஆண்டு காவிரியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், திருச்சி மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் நீராட வசதியாகச் சிறப்பு ஷவர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் நீராடி காவிரித் தாயை வழிபட்டதுடன், புதுமணப் பெண்கள் தங்கள் கணவர் கையால் புதிய தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர்.