காவிரி நீர்வரத்து அதிகரிப்பு... ஒகேனக்கல்லில் வினாடிக்கு 7,151 கனஅடியாக உயர்வு!
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாகத் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 5,760 கனஅடியாக இருந்த காவிரி நீர்வரத்து, தற்போது 7,151 கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இடையே மழை குறைந்ததால் திறக்கப்படும் தண்ணீரின் அளவு சற்று குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீர்வரத்து மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
குடிநீர் தேவை: ஒகேனக்கல்லில் குடிநீர்த் தேவைகளுக்காகத் தற்போது வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதிகளில் நீர்மட்ட நிலைமையை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.