தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர முடியாது... கர்நாடகா திட்டவட்டம்!
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதாகக் கர்நாடகத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தங்களிடம் உள்ள நீர் தங்களது குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது என்றும், எனவே தமிழ்நாட்டிற்குப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி வாயிலாகவும், தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் சுப்ரியா சாகு மற்றும் சுப்ரமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இருப்பினும் போதிய நீர்வரத்து இல்லை என்ற காரணத்தைக் கூறித் தமிழ்நாட்டிற்குரிய நீரைக் திறந்துவிடக் கர்நாடகத் தரப்பு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் மற்றும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போனால் குறுவைச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை நிலைநாட்டவும், உரிய நீரைப் பெறவும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா தொடர்ந்து எடுத்து வரும் இந்த ஏதேச்சதிகாரப் போக்கு தென் மாநிலங்களிடையே மீண்டும் நீர் தகராறைத் தீவிரப்படுத்தியுள்ளது. மாநில எல்லைகளில் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா எடுத்துள்ள இந்த உறுதியான முடிவு தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.