பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம் - சிபிஐ கண்டனம்!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இடம்பெற்றிருந்த தேசியத் தலைவர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரது பெயர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மு.வீரபாண்டியன், தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை ஒரு சாதாரண அச்சுப் பிழையாகவோ அல்லது கவனக்குறைவாகவோ கருத முடியாது என்றும், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களின் பெயர்களை நீக்கியதற்கான உண்மையான காரணத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.