ஈரான் போர் எதிரொலி - மத்திய கிழக்கு நாடுகளில் 12ம்வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து - மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும்?!

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் போர்க்களமாக மாறியுள்ளன. ஈரானும் இதற்குத் தீவிரமான பதிலடி கொடுத்து வருவதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

தற்போது நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், குவைத், ஓமன், கத்தார் மற்றும் பஹ்ரைன். வரும் மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறவிருந்த 12-ம் வகுப்புக்கான அனைத்துப் பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வுகளும் இதனுடன் சேர்த்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் மதிப்பீடு எப்படி?

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் அக மதிப்பீடு அல்லது கடந்த காலத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவலை:

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் இந்தத் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என்னவாகும் என்ற கவலை அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டாலும், கல்வி ஆண்டில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.