புற்றுநோயுடன் போராடி CBSE தேர்வில் 96.6% மதிப்பெண் பெற்ற மாணவர்!

 


சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஆரவ் வத்ஸ் பெற்றுள்ள 96.6 சதவீத மதிப்பெண்கள், சாதாரண மதிப்பெண்களைத் தாண்டி ஒரு மாபெரும் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ஆரவ் வத்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘லிம்போபிளாஸ்டிக் லிம்போமா’ எனப்படும் ஒரு வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடினமான கீமோதெரபி சிகிச்சைகள், உடல் சோர்வு மற்றும் மருத்துவமனை வாசமே வாழ்க்கை என இருந்த சூழலிலும், கல்வியின் மீதான தனது ஆர்வத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை.

கடுமையான உடல் உபாதைகளுக்கு இடையிலும், தினமும் 5 முதல் 6 மணி நேரம் படிக்க ஒதுக்கினார். பள்ளிக்கூடம் செல்ல முடியாத சூழலில், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இணையதள உதவிகளுடன் தனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டார். சிகிச்சையின் இடைவேளைகளில் கூட மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து அவர் படித்தது, சக நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

தற்போது 96.6 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ள ஆரவ், இந்த வெற்றியின் மூலம் புற்றுநோயை விடத் தனது தன்னம்பிக்கை பெரியது என்பதை நிரூபித்துள்ளார். "நோய் என் உடலைத் தான் பாதித்துள்ளது, என் லட்சியத்தை அல்ல" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது இந்த வெற்றிப் பயணத்திற்குப் பெற்றோரும், ஆசிரியர்களும் மிகப்பெரிய துணையாக இருந்துள்ளனர்.