சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

 

 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களில் பக்கங்கள் விடுபட்டிருப்பது, கூடுதல் விடைத்தாள் அல்லது வரைபடங்கள் காணாமல் போயிருப்பது போன்ற பிரச்சனைகளைச் சரிபார்ப்பதற்கும், மதிப்பெண்களில் அதிருப்தி உள்ளவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் இணையவழிப் பதிவு தொடங்கியது. இந்த ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி இன்று (ஜூன் 7) நள்ளிரவு வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டில் திருப்தி இல்லாத மாணவர்கள் மற்றும் விடைத்தாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புவோர் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விடைத்தாளின் நகலைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். விடைத்தாள் பிரச்சனைக்கு ஒரு பாடத்திற்கு 100 ரூபாயும், மறுமதிப்பீட்டிற்கு ஒரு பாடத்திற்கு 25 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதற்கான கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் போன்ற இணையவழி முறைகள் மூலம் எளிதாகச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க நினைக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.