போர் நிறுத்தம்... “அமைதிக்கு அடித்தளம் போட்டதே நாங்கதான்!” - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் பெருமிதம்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் மேகங்களை விலக்க, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள 2 வார கால தற்காலிக போர் நிறுத்தத்தில் தங்களது பங்கு மிக முக்கியமானது எனப் பாகிஸ்தான் தற்போது புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்கைச் சுமூகமாக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என அமெரிக்கா ஒருபுறம் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் இன்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான பலசுற்று ரகசிய மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாகிஸ்தானே முன்னின்று மத்தியஸ்தம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாகிஸ்தான் எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாகவே இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம் சாத்தியமானது என்பது அவரது வாதம்.

வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மேலும் கூறுகையில், "நாட்டிற்குள்ளும், சர்வதேச அளவிலும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே உலகின் பாதுகாப்பு கருதி வருங்காலத்தில் இன்னும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இத்தகைய சர்வதேச விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறுவது, உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனினும், அமெரிக்கா இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை.