போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காலில் சுட்டுப் பிடிப்பு!

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காவல்துறையினரைத் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்யச் சென்றுள்ளனர். அப்போது காவலர்களிடம் இருந்து தப்புவதற்காக ரவுடி ராஜா, தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தை எதிர்பாராதவிதமாகத் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

காவலரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்ற குற்றவாளியைத் தற்காப்புக்காகவும், மேற்கொண்டு தப்பியோடுவதைத் தடுப்பதற்காகவும் காவல்துறையினர் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த ரவுடி ராஜா மற்றும் கத்திக் குத்துக்கு ஆளான சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.