செல்போன் வாங்கித் தரல...  20 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... கதறும் பெற்றோர்!

 

தெலுங்கானா மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில், புதிய செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 20 வயது இளைஞர் சாய் குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது பழைய செல்போனை உடைத்துவிட்டுப் புதிய போன் கேட்டுப் பெற்றோரை வற்புறுத்தி வந்துள்ளார். தினக்கூலித் தொழிலாளிகளான அவரது பெற்றோர், அன்றாடச் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலையில் உடனடியாக போன் வாங்கிக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் வறுமை நிலையைப் புரிந்து கொள்ளாத சாய் குமார், மது போதையில் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் உறங்கிய பிறகு, வீட்டின் ஒரு பகுதியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதிகாலையில் மகனின் உடல் தூக்கில் தொங்குவதைக் கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சாய் குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் செல்போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பழக்கமே இத்தகைய விபரீத முடிவுகளுக்குக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வறுமையில் வாடும் குடும்பத்தில் மகனை இழந்த சோகம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.