2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... சந்தேகங்களை தீர்க்க வாட்ஸ்அப் வசதி அறிமுகம்!
இந்தியாவில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் வீடுகளின் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கவும், தேவையான விளக்கங்களை வழங்கவும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் புதிய வசதிகளைச் செய்துள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 1855 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக விவரங்களை அறிய ஒரு புதிய வாட்ஸ்அப் உரையாடல் வசதியையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கைபேசி வழியாகவே விளக்கங்களைப் பெற முடியும்.
இந்த வாட்ஸ்அப் வசதி அனைத்து மாநிலங்களிலும் உள்ள அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதன் அவசியம் குறித்து மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்பு கணக்கெடுப்புப் பணிகளைத் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் நடத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.