சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 4,500 அப்ரெண்டீஸ் இடங்கள் - ஜூன் 22 கடைசி தேதி!

 

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள 4,500 அப்ரெண்டீஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த இளம் பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியின் 4,500 மொத்த இடங்களில், மாநில வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள முக்கிய இடங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மகாராஷ்டிரா: 586 இடங்கள், உத்தரப் பிரதேசம்: 580 இடங்கள், மத்தியப் பிரதேசம்: 489 இடங்கள், உத்தரகண்ட்: 401 இடங்கள், மேற்கு வங்கம்: 315 இடங்கள், குஜராத்: 305 இடங்கள், தமிழ்நாடு: 202 இடங்கள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டப்படிப்பை மே 31, 2022 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ முடித்தவராக இருக்க வேண்டும்.

மே 31, 2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் தற்போதைய உள்ளூர் மொழியில் (தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில்) எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு வங்கிச் செயல்பாடுகள் குறித்து முழுமையான நேரடிப் பயிற்சி வழங்கப்படும்:

பயிற்சி காலம்: 12 மாதங்கள். பயிற்சி காலத்தில் அப்ரெண்டீஸ்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். இதைத் தவிர வேறு எந்த கூடுதல் படிகளோ அல்லது நிரந்தரப் பணி உத்தரவாதமோ வழங்கப்படாது.

விண்ணப்பதாரர்கள் பிஎஃப்எஸ்ஐ எஸ்எஸ்சி நடத்தும் 100 மதிப்பெண்களுக்கான ஆன்லைன் அப்ஜெக்டிவ் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிப் பட்டியலின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்வில் தவறான பதில்களுக்குக் கழிவு மதிப்பெண்கள் கிடையாது. ஆன்லைன் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு  ரூ.944, பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.708, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.236 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 12-ஆம் தேதி தொடங்கியது. இதற்குக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க ஜூன் 22, 2026 கடைசி நாளாகும்.

ஆர்வமுள்ள பட்டதாரிகள் மத்திய அரசின் தேசிய அப்ரெண்டீஸ் பயிற்சி போர்ட்டலான 'நாட்ஸ்' இணையதளத்தில் (nats.education.gov.in) முதலில் பதிவு செய்துவிட்டு, பின்னர் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான centralbankofindia.co.in பக்கத்திற்குச் சென்று ஜூன் 22-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.