9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை.. விண்ணப்பிக்க நவ.30 கடைசி தேதி!
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சீர்மரபின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார். தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சீர்மரபின வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தகுதியான மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் தகுதியான மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான scholarships.gov.in என்ற முகவரிக்குச் சென்று நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கத் தகுதியுள்ள மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து, மத்திய அரசின் இக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா கேட்டுக் கொண்டுள்ளார். பிற மாவட்டங்களில் வசிப்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.