சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிய சிறுமி கடத்தல்... பெரும் பரபரப்பு! 

 

ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்த   56 வயது முதியவரான ஷனிஜல் தாஸ் என்பவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கியிருந்து விவசாயக் கூலி பணி புரிந்து வந்தார். இந்நிலையில் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காகத் திருச்சியில் இருந்து ரயிலில் சென்னை வந்த அவர்கள், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நடைமேடையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தம்பதியின் அருகில் ஆழமான தூக்கத்தில் இருந்த 8 வயது சிறுமியைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு வால டாக்ஸ் சாலை வழியாக ரகசியமாகத் தப்பிச் சென்றுள்ளார்.

அப்போது அந்தச் சாலையில் சவாரிக்காகக் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், மதுபோதையில் தள்ளாடியபடி சிறுமியைத் தூக்கிச் சென்ற நபரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டு அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த நபர் தமிழில் பதிலளித்த நிலையில், தூக்கத்திலிருந்து விழித்த அந்தச் சிறுமி ஹிந்தியில் பேசியதால் சந்தேகம் வலுவடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாகப் பெரியமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட 45 நிமிடங்களிலேயே சிறுமியைப் பத்திரமாக மீட்டு அவதிப்பட்ட பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுமியைக் கடத்திய நபர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த 42 வயது பெயிண்டரான சசிகுமார் என்பது தெரியவந்தது. மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இந்த போதை ஆசாமி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திட்டமிட்டுச் சிறுமியைக் கடத்தியதை ஒப்புக்கொண்டதால் பெரியமேடு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஆபத்தான நேரத்தில் மிகச் சரியான சமயத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டுக் காவல் துறைக்குத் தகவல் அளித்த ஆட்டோ ஓட்டுநர்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்துத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.