தந்தையின் கட்சிக்கே சவால்... புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறார் கவிதா - தெலங்கானாவில் பரபரப்பு!
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகளும், முன்னாள் எம்.எல்.சி-யுமான கவிதா, வரும் ஏப்ரல் 25ம் தேதி தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்ட விவகாரத்தில் தனது உறவினர்கள் மீது கவிதா குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவர் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். புதிய கட்சி தொடங்குவது குறித்து பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கவிதா ரகசிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் நடத்தி வரும் 'தெலுங்கானா ஜக்ருதி' என்ற கலாசார அமைப்பே தற்போது அரசியல் கட்சியாக உருவெடுக்கவுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, தனது கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசுகையில், ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஐதராபாத் அருகே உள்ள முனீர்பாத் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்படும். பி.ஆர்.எஸ் கட்சி தேசிய அரசியலில் கவனம் செலுத்தியதால் தெலுங்கானாவில் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. தற்போது மாநிலத்தில் வலுவான பிராந்திய கட்சி இல்லை. அந்த இடத்தைப் 'ஜக்ருதி' நிரப்பும்" என்று கூறினார்.
இதுவரை ஆண்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளையே பெண்கள் பார்த்துள்ளதாகவும், தனது கட்சி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். கட்சியின் 95 சதவீத கவனம் தெலுங்கானா பிரச்சினைகள் மீதே இருக்கும். தேசிய விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளத் தனியாக ஒரு தேசியக் குழு அமைக்கப்படும்.
கே.சி.ஆர் மற்றும் அவரது மகன் கே.டி.ராமராவ் ஒருபுறம் பி.ஆர்.எஸ் கட்சியை வழிநடத்தி வரும் வேளையில், அதே குடும்பத்தைச் சேர்ந்த கவிதா தனிக்கட்சி தொடங்குவது பி.ஆர்.எஸ் கட்சியின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் வளர்ந்து வரும் பாஜக-வுக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.