தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக்கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருவதால் இந்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி வேலூர், திருப்பத்தூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
பருவமழைச் சூழல் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை நிலவரங்களுக்கு ஏற்பத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.