ரூ.500 நோட்டுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும்! பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
ஊழலைக் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஜிட்டல் கரன்சி தொடர்பான அறிக்கையைத் தயாரிப்பதில் தானும் பங்களித்ததாகக் குறிப்பிட்டார். அந்த அறிக்கையைப் பரிசீலிக்குமாறு ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டதாகவும், தற்போது மீண்டும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் கூறினார்.
பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதன் மூலம் பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்பது அவரது கருத்தாகும்.
தேர்தலில் பண பலத்தைக் குறைக்க வேண்டும்
அரசியல் என்பது பணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது; மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தேர்தலில் அதிகப் பணம் செலவழிக்கும் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சிப்பதால் ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வறுமையைக் குறைக்கவும் முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்