MBBS படிப்புகளுக்கான சீட் ஒதுக்கீட்டில் மாற்றம்... இனி உச்ச வரம்பு இல்லை - தென் மாநிலங்களுக்குப் சாதகமான தீர்ப்பு!

 

இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தனது பழைய கட்டுப்பாடுகளைத் தளர்த்திப் புதிய அரசிதழ் அறிவிப்பைவெளியிட்டுள்ளது.

இதுவரை, ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகைக்கும் 100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதன் காரணமாகத் தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் தடை இருந்தது. தற்போது இந்த மக்கள் தொகை விகிதாச்சார விதியை NMC முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் உள்கட்டமைப்பு வசதி கொண்ட மாநிலங்கள் எத்தனை இடங்களை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் போது அல்லது இடங்களை அதிகரிக்கும் போது, அதிகபட்சமாக 150 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த உச்ச வரம்பும் நீக்கப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருந்தால், கல்லூரிகள் இனி 200 அல்லது 250 இடங்கள் வரை அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.

மருத்துவக் கல்லூரிக்கும், அது சார்ந்த போதனா மருத்துவமனைக்கும் இடையிலான பயண நேரம் குறித்த விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இடையிலான தொலைவு அதிகபட்சம் 10 கி.மீ ஆக இருக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேசங்களில் இந்தத் தொலைவு 15 கி.மீ வரை இருக்கலாம் எனத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறிப்பாக நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தமிழகம் போன்ற மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் கூடுதலாக ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக இது வழிவகை செய்யும். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரத்தை உயர்த்தி அதிக மாணவர்களைச் சேர்க்க முடியும்.