“வேட்பாளரை மாத்துங்க..” டி.ஆர். பாலு வீட்டை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள்!

 

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் டி.ஆர். பாலுவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று திமுக வேட்பாளர் பட்டியலில், தாம்பரம் தொகுதிக்கு டாக்டர் கிருத்திகாதேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.ஆர். ராஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர், தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் உள்ள டி.ஆர். பாலுவின் வீட்டின் முன்பு குவிந்தனர். "வேட்பாளரை மாற்ற வேண்டும்" என முழக்கமிட்ட தொண்டர்கள், சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி, "உங்கள் காலில் கூட விழுகிறோம், மீண்டும் எஸ்.ஆர். ராஜாவுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்" எனக் கதறினர்.

தாம்பரத்தில் மூன்று முறை வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட ராஜாவுக்குத் தொகுதி மக்களிடையே நல்ல செல்வாக்கு இருப்பதால், புதியவருக்குப் பதில் அவருக்கே வாய்ப்பு தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. போராட்டம் முற்றிய நிலையில், எஸ்.ஆர். ராஜா நேரடியாக டி.ஆர். பாலுவைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு தொண்டர்களிடையே பேசிய டி.ஆர். பாலு, "ராஜா எனக்குச் சிறுவயதிலிருந்தே தெரிந்தவர். அவருக்காக நான் தலைமைக்குப் பரிந்துரை செய்தேன். ஆனால், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்த முடிவுக்குச் சில காரணங்கள் இருக்கும். அவருக்கு எதிர்காலத்தில் வேறு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது."

டி.ஆர். பாலுவின் இந்த சமாதானப் பேச்சிற்குப் பிறகும், தொண்டர்கள் சிலர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.