சார்தாம் யாத்திரையில் ஹெலிகாப்டர் பாதுகாப்பு கேள்விக்குறி... 9 ஆண்டுகளில் 5 பெரிய விபத்துகள்!
உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்தாம் யாத்திரைப் பாதையில் ஹெலிகாப்டர் விபத்துகள் தொடர்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை குறைந்தது 5 பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அக்டோபர் 30-ம் தேதி ஜோஷிமத் அருகே 6 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2017 ஜூன் 10-ம் தேதி பத்ரிநாத் ஹெலிபேடு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானப் பராமரிப்புப் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். 2022 அக்டோபர் 18-ம் தேதி கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி சென்ற ஹெலிகாப்டர் கருட் சட்டி பகுதியில் மலையில் மோதியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
2025 மே 8-ம் தேதி உத்தரகாசி மாவட்டம் கங்கானி அருகே நடந்த விபத்தில் 6 பேர் பலியாகினர்; ஒருவர் படுகாயமடைந்தார். அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி கவுரிகுண்ட் அருகே ஏற்பட்ட மற்றொரு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
தற்போது ஜோஷிமத் அருகே நடந்த விபத்தில் 6 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதிகளில் மாறும் வானிலை, குறைந்த பார்வைத்திறன், விமானப் போக்குவரத்து நெரிசல் ஆகியவை பாதுகாப்புச் சவால்களாக உள்ளன. விமானிகளுக்கு மலைப்பகுதியில் பறப்பதற்கான கட்டாய சிறப்புப் பயிற்சி மற்றும் கண்காணிப்பு முறைகள் தேவை என நாடாளுமன்றக் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது.