மாட்டை விரட்டச் சென்றபோது பயங்கரம்... ரயில் மோதி மூதாட்டி உடல் சிதைந்து பலி!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மனைவி குப்பம்மாள் (80). இவர் இன்று மாலை சுமார் 5:50 மணி அளவில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த டெமூ ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அங்கு ஒரு மாடு தண்டவாளத்தின் குறுக்கே நின்றதை மூதாட்டி கவனித்துள்ளார்.
அந்த மாட்டை ரயிலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் குப்பம்மாள் தண்டவாளத்திற்குள் இறங்கி மாட்டை விரட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த டெமூ ரயில் அவர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி குப்பம்மாள் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாட்டைப் பாதுகாக்கச் சென்ற மூதாட்டியே விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டுத் திருவாரூர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சோகச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.