பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை விட மலிவு.. 5 ரூபாயில் ஹைட்ரஜன் ரயிலில் பயணிக்கலாம்!

 

இந்திய ரயில்வேயின் பசுமைப் புரட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் கடந்த ஜூலை 17ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலையை விடக் குறைவாக, பயணிக்கும் தூரத்திற்கு ஏற்பக் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நவீனப் பயணத்தை வழங்கும் வகையில் இந்தச் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜிந்த் சந்திப்பு முதல் சோனிபட் வரையிலான 89 கி.மீ தூரத்தை இந்த ரயில் சுமார் 2 மணி நேரத்தில் கடக்கும்.

10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வடிவமைப்பு வேகம் மணிக்கு 110 கி.மீ என்றாலும், தற்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. ஜிந்த் நகரம், பாண்டு பிண்டாரா, லலித் கேரா, பாம்பேவா, இசாபூர் கேரி, புடானா, கந்த்ராய், ராப்ரா, லாத், மோகனா மற்றும் பார்வாஸ்னி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான வேதியியல் வினையால் மின்சாரம் உற்பத்தியாகி ரயில் இயங்குகிறது. இதனால் கரியமில வாயு அல்லது புகை ஏதும் வெளியாகாமல் நீராவி மற்றும் வெப்பம் மட்டுமே கழிவாக வெளியேறுகிறது. இந்த ரயிலுக்கு எரிபொருள் நிரப்ப ஜிந்தில் 3,000 கிலோ சேமிப்புத் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே ஹைட்ரஜன் ஆலை நிறுவப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் கசிவு, புகை, தீப்பற்றுதல் மற்றும் அதிக வெப்பத்தைக் கண்டறியும் நவீனத் தானியங்கி பாதுகாப்பு அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.