ஆம்பூர் பாலாற்றில் மீண்டும் ரசாயன நுரை.. நிலத்தடி நீர் மாசடைவதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாயும் பாலாற்றில், கடந்த சில நாட்களாக மீண்டும் அடர்ந்த வெள்ளை நிற ரசாயன நுரை பொங்கி வழிந்து வருவதால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில தோல் தொழிற்சாலைகள், தங்களது கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரிக்காமல் சட்டவிரோதமாக நேரடியாகப் பாலாற்றில் வெளியேற்றுவதே இந்த அவலத்திற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆற்றில் கொட்டும் இந்த ரசாயனக் கழிவுகளால், நீர்நிலை முழுவதும் நுரை பொங்கி ஆற்றுப் படுகை முழுவதும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.
ஆற்றில் ரசாயன நுரை பொங்கி வழிவதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதுமட்டுமன்றி, குடிநீராகவும் விவசாயத்திற்குப் பயன்படக்கூடியதுமான பாலாற்றின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து, நஞ்சாகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்தும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்வது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆம்பூர் பாலாற்றுப் பகுதியில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் திறக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.