செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிர்ச்சி! கழிவறை கதவில் அதிக இடைவெளி... பயணிகள் புகார்
சென்னை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறை கதவில் அதிக இடைவெளி இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் கழிவறையை பயன்படுத்துவதற்கு அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர்-சென்னை இடையே தினமும் இருமார்க்கங்களிலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி ஒருவர் கழிவறை பகுதியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ரெயில் கழிவறையின் கதவில் வழக்கத்திற்கு மாறாக அதிக இடைவெளி இருப்பது தெரிகிறது. இதனால் கழிவறைக்குள் இருப்பவர்களுக்கு தனியுரிமை பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
குறிப்பாக நீண்ட தூர ரெயில் பயணங்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கதவில் போதிய மறைப்பு இல்லாத நிலையில், கழிவறையை பயன்படுத்துவதற்கு பயணிகள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.ரெயில் கழிவறைகளில் பயணிகளின் தனியுரிமையை உறுதி செய்யும் வகையில் கதவுகளை முறையாக அமைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை-திருச்செந்தூர் இடையே தினசரி இயக்கப்படும் இந்த ரெயிலில் 21 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.