அதிகாலையில் அதிர்ச்சி... கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய ஆம்னி பஸ்!

 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்னி பேருந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த 28 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

கோவையில் இருந்து சென்னையை நோக்கி இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 28 பயணிகள் இருந்தனர்.திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில் பேருந்து சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து காரணமாக திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், போக்குவரத்தை சீரமைத்ததுடன் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.