சாலையில் குறுக்கே வந்த மாடு… அரசு பேருந்து மீது மோதி கவிழ்ந்த வேன்; 3 பெண்கள் பலி!

 

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும், தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனும் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பையனூர் பேருந்து நிறுத்தம் அருகே இன்று (நவம்பர் 6) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கூவத்தூர் அருகே உள்ள பெருந்தூர் கிராமத்தில் இருந்து சுமார் 20 பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கேளம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து, எதிரே தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 20 பேர் மீட்கப்பட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.