ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பிரசவம்! ஆட்டோவிலேயே பிறந்த அழகான பெண் குழந்தை

 

 

சென்னையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் ஏற்பட்ட நிலையில், அழகான பெண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரின் மனைவி கீர்த்தி (20). நிறைமாத கர்ப்பிணியான இவர், ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் மருத்துவமனைக்கு சென்று வருவதற்காக எண்ணூர் பஜார் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டில் கீர்த்தி தங்கியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை கீர்த்திக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக ஆட்டோவில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆட்டோ அன்னை சிவகாமி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது கீர்த்திக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து ஆட்டோவிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து கீர்த்தியையும், பிறந்த குழந்தையையும் அருகில் உள்ள அன்னை சிவகாமி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் தாயும் குழந்தையும் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.