லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராகும் தமிழ் பெண் நித்யா ராமன்?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் நித்யா ராமன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றின் மேயராக தமிழ்ப் பெண் ஒருவர் பொறுப்பேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுடன் நடைபெற்ற இந்த மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் கரேன் பாஸ் மற்றும் நித்யா ராமன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் கரேன் பாஸ் முன்னிலையில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த வாக்குகள் எண்ணப்பட்டபோது நித்யா ராமன் முன்னேறி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார்.
இருப்பினும், சுமார் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருப்பதால் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை. சென்னையில் பிறந்த நித்யா ராமன், நகர்ப்புற திட்டமிடல் துறையில் கல்வி பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வீடற்றவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, குறைந்த விலையில் வீடுகள் அமைப்பது, நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே நியூயார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் தேர்தலில் நித்யா ராமனின் முன்னிலை அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே கவனம் பெற்றுள்ளது.