நள்ளிரவில் நடுவழியில் நிறுத்தப்பட்ட சென்னை ஆம்னி பேருந்து... 50 பயணிகள் தவிப்பு !
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தை, நெல்லையில் ஓட்டுநர் திடீரென நடுவழியில் நிறுத்தியதால் 50 பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நள்ளிரவில் பேருந்து நிறுத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பேருந்தில் இருந்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
பேருந்தை நிறுத்தியதற்கான காரணத்தை ஓட்டுநரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது, அதிக கட்டணம் தொடர்பான புகாரால் பேருந்தை இயக்க வேண்டாம் என உரிமையாளர் கூறியதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் எனக் கூறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன், பேருந்தை உடனடியாக இயக்கி பயணிகளை சென்னையில் பாதுகாப்பாக இறக்கிவிடுமாறு எச்சரித்தார்.
போலீசாரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பேருந்து மீண்டும் புறப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.