சென்னையில் 'ஒலிம்பிக் நகரம்', மோட்டார் ரேஸ் கார் சிட்டி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதோடு, உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கும் நோக்கில் சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் எனச் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ மையங்கள், மற்றும் வீரர்களுக்கான தங்குமிட வசதிகளுடன் ஒருங்கிணைந்த 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' உருவாக்கப்படவுள்ளது.
விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சர்வதேச அளவிலான கார் ரேஸ் வசதிகள், கட்டமைப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கும் மோட்டார் ரேஸ் கார் சிட்டியும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வதற்கும், உலகத் தரத்திலான திறமையான வீரர்களை உருவாக்குவதற்கும் இந்த மையம் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்.