undefined

விளம்பரப் பலகைகளுக்கான புதிய விதிமுறைகள் - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

 

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் வைப்பதைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இனி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து உரிமம் பெற்ற பின்னரே விளம்பரப் பலகைகளை அமைக்க முடியும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் படி, விளம்பரப் பலகைகளை அமைப்பதற்கான நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோர், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://erp.chennaicorporation.gov.in) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒற்றைச் சாளரக் குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து, விதிகள் சரியாக இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கும்.

தரைமட்டத்திலிருந்து விளம்பரப் பலகையின் அதிகபட்ச உயரம் 10 மீட்டருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், கட்டிடங்களின் இரண்டாம் மாடி வரை மட்டுமே பலகைகளை அமைக்க அனுமதி உண்டு. டிஜிட்டல் திரைகளில் விளம்பரங்கள் சுழற்சி முறையில் காட்டப்படும்போது, ஒரு காட்சி குறைந்தது 10 விநாடிகளாவது திரையில் இருக்க வேண்டும்.

அனிமேஷன் அல்லது முழுமையான வீடியோ காட்சிகள் வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்கள் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். சாலைகளில் ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் வீடியோக்களை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிக்கவும், ஏற்கனவே உள்ள விதிமீறல்களைச் சரிசெய்யவும் மாநகராட்சி நிர்வாகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. வரும் மார்ச் 6, 2026-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 7ம் தேதி முதல் உரிமம் இல்லாத அனைத்துப் பலகைகளும் அங்கீகரிக்கப்படாதவையாகக் கருதப்பட்டு அகற்றப்படும். இதற்கான செலவு சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும். அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விளம்பரப் பலகைகள் தரமான பொருட்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருக்கும் பலகைகள் உடனடியாக அகற்றப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.