உஷார்... வளர்ப்பு நாய், பூனைகளை பொது இடங்களில் கைவிட்டால் ரூ.10,000 அபராதம் - மாநகராட்சி அதிரடி உத்தரவு!

 

சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி மாமன்றம் நிறைவேற்றியுள்ளது.சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் செல்லப்பிராணிகளை கைவிடுவதை தடுப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

செல்லப்பிராணிகளை பொது இடங்களில் கைவிட்டால், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து ஆய்வு செய்வதுடன், நாய் மற்றும் பூனைகளுக்கு பொருத்தப்பட்டுள்ள மைக்ரோசிப் மூலம் அதன் உரிமையாளரை கண்டறிந்து அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளை கைவிடுவோருக்கு முதலில் ரூ.25,000 அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிலைக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து அபராதத் தொகை ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மாநகராட்சியின் POS இயந்திரங்கள் மூலம் நேரடியாக வசூலிக்கவும் தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான பதிவு மற்றும் மைக்ரோசிப் நடைமுறை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மைக்ரோசிப்பில் உரிமையாளரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பொது இடங்களில் கைவிடப்படும் செல்லப்பிராணிகளை அதன் மூலம் அடையாளம் காண முடியும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

செல்லப்பிராணிகளை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் அவற்றை பராமரிக்கும் இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் வாரத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அவற்றை பொது இடங்களில் கைவிடாமல், உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.