சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்! கொரோனாவுக்கு பிறகான ‘வார் ரூம்’ சேவை!

 

தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்று பரவல் தற்போது மாநில அரசின் முயற்சிகளினால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய முயற்சியாக வார் ரூம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் சிலருக்கு தூக்கமின்மை, சுவாச கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் தென்படுவதாக தெரிகிறது. அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தனிக்குழுவினர் செயல்பட தொடங்கி உள்ளனர்.

இந்த வார் ரூம் சேவைக்காக தனியாக பயிற்சி பெற்ற 125 தன்னார்வலர்கள், மருத்துவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டறிகின்றனர் .

அதன் பின்னர், அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது . உளவியல் ரீதியான பிரச்னைகள் உள்ளதா என்பதையும் அறிகின்றனர். மேலும் உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களுக்கு 15 நாட்களுக்கு பின் அழைத்து உடல் நலம் குறைத்து விசாரிக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அடுத்த 4 வாரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.