தனியார் டெலிவரி குடோனில் தீ விபத்து: கரும்புகையில் சிக்கி காவலாளி உயிரிழப்பு!
சென்னை பெரவள்ளூர் அருகே தனியார் டெலிவரி நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், காவலாளி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அகரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டெலிவரி நிறுவனத்தின் குடோனில் இன்று (நவம்பர் 3) காலை திடீரென தீப்பிடித்தது. அப்போது குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த அங்கு காவலாளியாகப் பணியாற்றிய மாத்தூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, உள்ளே சென்றுள்ளார்.
அப்போது குடோனுக்குள் பரவியிருந்த அடர்ந்த புகையில் அவர் சிக்கிக்கொண்டார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து செம்பியம், கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ராமமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.