சென்னையில் டெங்கு அதிர்ச்சி! ஒரே நாளில் 72 பேருக்கு பாதிப்பு... ஒரு மாதத்தில் 2 மடங்கு உயர்வு

 

 

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் டெங்கு பாதிப்பு 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை சுமார் 18 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 3,500-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலமாக கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகள் மற்றும் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.