சென்னையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு! 🦟 டெங்குவை தடுக்க மாநகராட்சியின் புதிய முயற்சி

 

 

சென்னையில் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள கூவம் ஆற்றுப் பகுதியில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிக்கும் சோதனைப் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டாரங்களிலும் தலா ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் மருந்து தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொசுக்கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் கொசுப்புகை மருந்து பரப்பும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக மொத்தம் 3,703 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகள் 2,076 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, வீடு வீடாக கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், மருத்துவமனைகள், புதிய கட்டுமானப் பகுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் 7,126 புதிய கட்டுமான இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 25,035 காலிமனைகளும் கண்டறியப்பட்டு, அங்கு கொசு உற்பத்தி ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, நீர்நிலைகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் கொசுப்புழு கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.