1,500 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னைப் பொறியாளர் - காவலில் எடுத்து விசாரிக்கும் கேரளா ஏடிஎஸ் போலீசார்!
நாடு முழுவதும் கடந்த 2023 முதல் 2025 வரை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை ஐடி பொறியாளர் சரத்திடம் தீவிர விசாரணை நடத்தக் கேரளத் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சென்னை வந்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய சரத், மெய்நிகர் தனிப்பின்னையமைப்பு மற்றும் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு 1,500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வந்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, தொழில்நுட்ப தடயங்களின் அடிப்படையில் சரத்தைக் கண்டறிந்து அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சரத் அனுப்பிய போலி மிரட்டல்களில் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாகக் கேரளாவில் மட்டும் அவர் மீது சுமார் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்குகளின் பின்னணியில் வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா அல்லது தனிப்பட்ட முறையில் செயல்பட்டாரா என்பதை அறிய, சைபர் கிரைம் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை நீதிமன்ற அனுமதி பெற்றுத் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.