சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: அலிரெஜா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் - கடைசி இடத்தை பிடித்தார் குகேஷ்!
சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 4-வது 'சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்' சர்வதேச செஸ் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் பிரான்ஸ் நாட்டின் இளம் நட்சத்திரம் அலிரெஜா பிரோஸ்ஜா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.போட்டியின் இறுதிச் சுற்றில் பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா, இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜூன் எரிகசியை எதிர்கொண்டு ஆட்டத்தை 'டிரா' செய்தார்.
மொத்த சுற்றுகளின் முடிவில் 4.5 புள்ளிகள் பெற்ற அலிரெஜா முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் தட்டிச் சென்றார். சாம்பியன் பட்டம் வென்ற அலிரெஜா பிரோஸ்ஜாவுக்குக் கோப்பையுடன் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இத்தொடரில் டிமிட்ரி சிறப்பாக விளையாடி ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையுடன் 2-வது இடத்தைப் பிடித்தார். இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-வது இடத்தைக் கைப்பற்றி ரூ. 10 லட்சம் பரிசைப் பெற்றார்.
உலகச் சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், தனது கடைசிச் சுற்றில் ஹான்ஸ் நிமானுடன் மோதி ஆட்டத்தை டிரா செய்தார். தொடர் முழுவதும் எதிர்பார்த்த அளவில் சோபிக்காத குகேஷ், வெறும் 2 புள்ளிகளுடன் அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.