பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி 3 சிறுவர்களை அழைத்துச் சென்ற நபர்… துன்புறுத்தியதாகப் புகார் !
சென்னையில் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி 12 வயது சிறுவர்கள் 3 பேரை அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விக்ரம் (38) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காசிமேடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் 3 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் சிறுவர்களைத் தேடி வந்தனர்.இந்த நிலையில், விக்ரம் என்பவர் தீபாவளிக்கு பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி சிறுவர்களை அழைத்துச் சென்று, பின்னர் ராயபுரம் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, சிறுவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று மது அருந்துமாறு வற்புறுத்தியதுடன், சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்ரமைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு நேர்ந்த பாதிப்பு மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.