மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வீடுகளில் மர்ம திரவம் தெளிப்பு… 3 பெண்களுக்கு மூச்சுத்திணறல்!

 

 

சென்னை கொடுங்கையூர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறிக்கொண்டு வீடுகளுக்குள் கொசு மருந்து தெளித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தெளித்த திரவத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊழியர்கள் எனக் கூறி வீடுகளுக்குள் நுழைந்தவர்கள்

கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள், தாங்கள் மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வீடுகளில் கொசு மருந்து தெளித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், சுமதி, சுமித்ரா ஆகிய 2 பெண்களுக்கும் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்கள் அனுப்பப்படவில்லை

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பகுதியில் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் யாரும் அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள் யார், அவர்கள் தெளித்த திரவம் என்ன, எதற்காக வீடுகளுக்குள் தெளித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.